பிரெஞ்ச் கயானா, பிப்.6:தகவல் தொடர்பை மேம்படுத்த இஸ்ரோ உருவாக்கிய ஜி சாட் -31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நமது நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கும் வகையில், அதிநவீன தகவல் தொடர்பு செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 40-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ‘ஜிசாட்-31’ -ஐ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.

இந்த செயற்கைக் கோள், இன்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொவ்ரூவில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.

‘ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள். இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும். ‘ஜிசாட்-31’ செயற்கைக் கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும்.இரண்டே மாதங்களில் கொவ்ரூவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிற ‘இஸ்ரோ’வின் இரண்டாவது செயற்கைகோள் இதுவாகும். கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி 5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-11’ செயற்கைக் கோள், பிரெஞ்ச் கயானாவின் கொவ்ரூவில் இருந்து இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.