சென்னை, பிப்.6: பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட கை, கால்களுக்கு சொந்தமானவர் துணை நடிகை சந்தியா என்பது தெரியவந்துள்ளது.

இவர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதும், சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணனின் மனைவி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சுத்தியால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்து, ரம்பத்தால் உடலை துண்டு துண்டாக அறுத்து பல இடங்களில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில், கடந்த 21-ம் தேதி பிளாஸ்டிக், இரும்பு பொருட்களைச் சேகரிக்கும் சிலர் குப்பைகளிடையே மூட்டைகள் இருந்ததை பார்த்தனர். அவற்றில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் 2 கால்கள் தனித் தனியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான பள்ளிக்கரணை போலீஸார் கை, கால்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணின் உடல் பாகம் அழுகாமல் இருந்தது. மேலும் பெண்ணின் வலது கைரேகையைக் கொண்டு ஆதார் பதிவு மூலம் அவர் யார் என்பதைக் கண்டறிய நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த பெண்ணின் கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அந்த புகைப்படங்களை வெளியிட்ட போலீசார் அந்த பெண்குறித்த தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
உடலின் மற்ற பாகங்கள் கிடைக்காத நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

துணை ஆணையர் முத்துசாமி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படை போலீசார் மாநிலம் முழுவதும் காணாமல் பெண்கள் பற்றி வந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட பெண் துணை நடிகை சந்தியா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் மேலும் வெளியான தகவல்கள் வருமாறு:

தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவை, அதே ஊரைச் சேர்ந்த துணை இயக்குனர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜாபர்கான்பேட்டையில் அவர்கள் வசித்து வந்தனர்.

பாலகிருஷ்ணன், தனது மனைவியின் பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பித்து 2019-ம் ஆண்டில் ‘காதல் இலவசம்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்தார். அதில் சந்தியாவே கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் சரியாக ஓடாததால் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாலகிருஷ்ணன் வேறு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் பாலகிருஷ்ணன் போட்டியிட்டார்.

இந்நிலையில், பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி சந்தியாவிற்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கியை அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இவர்களுக்கிடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தியா தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும், அவரை பாலகிருஷ்ணன் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து ஏற்பட்ட குடும்பச் சண்டையில் மனைவியை பாலகிருஷ்ணன் சுத்தியால் அடித்துக்கொன்று இருக்கிறார்.

இதில் சந்தியா இறந்துவிட அவரது உடலை 7 பாகங்களாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார். மரம் அறுக்கும் ரம்பத்தால் தலையை தனியாகவும், மார்பகம் முதல் இடுப்பு வரை ஒரு பாகமாகவும், இரண்டு கை, கால்களை தனித்தனியாக அவர் அறுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேறு ஒருவருடன் தனது மனைவி சந்தியா தொடர்பு வைத்திருந்ததே இந்த கொலைக்கு காரணமென பாலகிருஷ்ணன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். இதையடுத்து சந்தியாவின் உடல் பாகங்களை எங்கெங்கு வீசி எறிந்தார் என்பதை வாக்குமூலத்தின் மூலம் தெரிந்துகொண்ட போலீசார் தற்போது அடையாறு பாலத்தின் கீழ் தேடி வருகின்றனர்.