கோலாலம்பூர், பிப்.6:பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை மலேசிய போலீசார் கைது செய்தனர்.

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதி, வழிச்செலவுக்காக தங்கள் 4 மாத பெண் குழந்தையை வைத்து வித்தைக் காட்டி பணம் சேர்த்துள்ளனர்.

அந்த வகையில் மலேசியா சென்ற ரஷிய தம்பதி தலைநகர் கோலாலம்பூரில் மக்கள் மத்தியில் குழந்தையின் காலை பிடித்து தலைகீழாக சுற்றியும், குழந்தையை தலைக்கு மேல் வீசி ஏறிந்து கைகளால் பிடித்தும் வித்தை செய்ய, அருகில் உட்கார்ந்திருந்த தாய் கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார்.

இந்த வீடியோவை பார்த்த போலீசார் குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.