திருச்சி, பிப்.6: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பெண் பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து அந்த பெண்ணிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த ஜென்சி ஜோசப் என்பது தெரியவந்தது.

மேலும்,கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஒருவர் அவசரமாக திருச்சிக்கு கொண்டு செல்ல வேண்டிய மருந்து என்று கூறி, ஜென்சி ஜோசப்பிடம் ஒரு பார்சலை அளித்ததாகவும், அந்த பார்சலை திருச்சியில் பெற்றுக்கொள்ளும் நபர், அவருக்கு ரூ.20 ஆயிரம் தருவார் என்று கூறியதாகவும், அதனால் பார்சலை வாங்கி வந்ததாகவும் அதிகாரிகளிடம் ஜென்சிஜோசப் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜென்சி ஜோசப்பிடம் இருந்து மொத்தம் 1 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக ஜென்சி ஜோசப்பிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் அடிக்கடி தங்கம் கடத்தி வருவதும் அவற்றை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.