சென்னை, பிப்.6: அதிமுக சார்பில் எம்பி தேர்தலில் போட்டியிட விரும்பம் தெரிவித்து ஏராளமான நிர்வாகிகள் இன்று 3-வது நாளாக அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விரும்ப மனு பெறும் நிகழ்ச்சியை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தை அமாவாசை தினமான கடந்த 4-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தனர். அன்றைய தினமே முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் மற்றும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் விருப்ப மனு அளித்தனர்.

நேற்று 2-வது நாளாக மனு பெறப்பட்டது. முன்னாள் கவுன்சிலரும், ஆயிரம் விளக்கு பகுதி நிர்வாகியுமான ரெட்சன் அம்பிகாபதி உள்ளிட்டோர் மனு அளித்தனர். இன்று 3-வது நாளாக தலைமை கழகத்தில் ஏராளமானோர் மனு அளித்தனர். காஞ்சிபுரம் எம்பி மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று ஆர்வமுடன் விருப்ப மனு அளித்தனர்.