சென்னை, பிப்.7:சென்னை அண்ணாசாலையில் டாஸ்மாக் பார் ஊழியர் கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்னொரு ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள டாஸ்மாக் பாரில் சமையல்காரராக பணியாற்றி வருபவர் வள்ளியப்பன் (வயது 42). புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர், நேற்று வேலையை முடித்து விட்டு அங்கேயே படுத்து உறங்கினார்.

நள்ளிரவில் இதே பாரில் பணியாற்றும் சாமன் என்ற இன்னொரு ஊழியருக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சாமன் நைலான் கயிற்றால் வள்ளியப்பனின் கழுத்தை இறுக்கியதாக தெரிகிறது. இதில் அந்த இடத்திலேயே வள்ளியப்பன் இறந்து விட்டார். உடனடியாக சாமன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இன்று காலையில் பார் உரிமையாளர் கதவை திறந்த போது உள்ளே வள்ளியப்பன் இறந்து கிடந்தது. தெரிய வந்தது. இது குறித்து ராயப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பாரில் வள்ளியப்பன் சமையல் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாமன் என்பவருக்கு சரியாக சாப்பாடு கொடுக்கவில்லை என தெரிகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இது முற்றியதால் நேற்றிரவு படுகொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.