சென்னை, பிப்.8: போரூர் போலீஸ் நிலையம் அருகே நேற்று இரவு ஏடிஎமில் பணம் நிரப்ப வந்த ஊழியரை வெட்டி ரூ.10 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் போலீசாருக்கு முக்கிய துப்பு கிடைத்துள்ளது. 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை போரூரை அடுத்த நூம்பல் மூவேந்தேர் நகர் பகுதியில் கனரா வங்கியின் ஏடிஎம் ஒன்று உள்ளது. நேற்றிரவு தனியார் ஏஜென்சி ஊழியர்களான தேவராஜ் (வயது 35), முரளி (வயது 30) ஆகியோர் காரில் வந்து ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பிக்கொண்டு இருந்தனர். அப்போது மையத்தின் ஷட்டர் திறந்த நிலையிலேயே இருந்தது. அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் தலையில் ஹெல்மெட் மற்றும் கைகளில் உறை அணிந்து வந்த இரண்டு நபர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளிலோய அமர்ந்திருக்க மற்றொருவர் ஏடிஎமினுள் சென்று அங்குள்ள ஊழியர் தேவராஜை கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

இது பற்றி தகவலறிந்ததும் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், உதவி கமிஷனர் ஜான் சுந்தர் மற்றும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த தேவராஜூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் பதிவு எண்ணும் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த கொள்ளையில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது. அதை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.