சென்னை, பிப்.8:வறுமை கோட்டிற்கு கீழ்வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சமும், விபத்தால் ஏற்படும் மரணத்திற்கு ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 8-வது முறையாக பட்ஜெட் டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

தமிழக அரசின் வரவு-செலவு திட்டத்தின் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். பட்ஜெட்டில் முக்கிய அம்சங்களாக அவர் கூறியிருப்பதாவது:

வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில் விரிவான மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் இயற்கை மரணம் மற்றும் விபத்தால் ஏற்படும் மரணத்திற்கு இழப்பீட்டு தொகையாக முறையே ரூ.2 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் வழங்கப்படும்.

விபத்தால் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். இத்திட்டத்திற்கான காப்பீட்டு தொகைக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு பென்சன்மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் பயனை அமைப்புச்சாரா தொழிலாளர் பெறும் வகையில் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

வறுமை ஒழிப்புத் திட்டம்

வறுமை ஒழிப்பில் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ள அரசு, வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. பல்வேறு நகர்ப்புற மற்றும் ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்து வதற்கான மைய நிறுவனமாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உள்ளது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத் துக்கு நடப்பாண்டில் 349.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்க தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.230.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கான இந்த நிதி நிலை அறிக்கையில் 1031.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

38,000 குடியிருப்புகள்

2030-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பான வாங்கும் திறனுக்கேற்ற வீட்டு வசதியும், அடிப்படை வசதிகளும் கிடைக்க வழிவகை செய்வதுடன் குடிசைப் பகுதிகளை மேம்படுத்தும் இலக்கினை அடைவதற்காக மாநில நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் குடியிருப்புக்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வீட்டு வசதி சந்தையை எளிதில் அணுகி அவர்கள் வாங்கக் கூடிய விலையில் வீட்டு வசதி பெற வழிவகை செய்யப்படும். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு உலக வங்கியின் உதவியுடன் ரூ.4647.50 கோடி செலவில் 38,000 குடியிருப்புகள் கட்டப்படும்.