ஆக்லாந்து, பிப்.8: நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், 2-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது.

இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால், 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து நியூசிலாந்து அணி தடுமாறியது. அதிகபட்சமாக, கிராண்ட்ஹோம் மட்டும் அரைசதம் கடந்தார். இந்திய பவுலர் குர்ணல் பாண்டியாவின் பந்துவீச்சில், எதிரணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 3 பேரை வீழ்த்தினார். இந்தியாவின் புவனேஸ்வர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தனர். 159 ரன் வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 50 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 30 ரன் எடுத்தார். விஜய் சங்கர் ரன் குவிக்கும் முயற்சியில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த்-டோனி ஆகியோர் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

தோனி 20 ரன்களும், ரிஷப் பந்த் 40 ரன்னும் சேர்த்தனர். இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. 3-வது போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.