சென்னை, பிப்.9:  சின்னத்திரை நடிகர்களின் சம்பளத்தை முறைப்படுத்தக்கோரி நாளை சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். திரைப்படங்களை தொடர்ந்து சின்னத்திரையிலும் ஏராளமான நடிகர், நடிகைகள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது எண்ணற்ற சேனல்கள் இருப்பதால் அவற்றில் சீரியல்கள் அதிக அளவில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் சின்னத்திரை நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு என தனி சங்கமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீரியல்களில் ஒப்பந்தம் செய்யப்படும் நடிகர், நடிகைகளுக்கு பேசிய அளவு ஊதியத்தை தராமல் தயாரிப்பாளர்கள் இழுக்கடிப்பதாகவும், மீடியேட்டர்கள் பாதி பணத்தை பிடுங்கிக்கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகர், நடிகைகளின் சம்பளத்தை முறைப்படுத்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளனர்.

காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இயக்குனர் கே.பாக்கியராஜ் தொடங்கி வைக்கிறார். மேலும் திரைப்படத்துறையை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்த உண்ணாவிரதப்போட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.