திருப்பூர், பிப்.9: நாளை திருப்பூர் வரும் பிரதமர் மோடி கோவை, நீலகிரி, கரூர் உட்பட
8 மக்களவைத் தொகுதிகளில்  பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் பிஜேபி கூட்டணி குறித்து பிரதமர் முக்கிய அறிவிப்பை இந்த கூட்டத்தில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாளை ஒரு நாள் பயணமாக திருப்பூர் வருகிறார். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் பிஜேபி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் 12.55 மணிக்கு பிரதமர் மோடி கோவை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு பிரதமர் வருகிறார்.

பகல் 2 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஜேபியின் மாநில பொதுச்செயலாளரும், தேர்தல் பொறுப்பாளருமான வானதி சீனிவாசன் கூறியதாவது:- நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய 8 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பெருமாநல்லூரில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு முக்கிய உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பிஜேபி பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.  பொள்ளாச்சி, கோவை, நீலகிரி ஆகிய தொகுதிகளில் கடந்த மக்களவைத் தொகுதிகளில் திமுகவை விட அதிக ஓட்டுகள் பிஜேபி பெற்று 2-ம் இடம் பெற்றது.  இந்த நிலையில் பிரதமர் இந்த தொகுதிகளில் பிரச்சாரத்தை துவக்கி வைக்கிறார். மத்திய அரசு இந்த பகுதிக்கு செய்துள்ள நலத்திட்டங்களை அவரே இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கிறார்.

திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைத்தார். மேலும் கோவை, திருப்பூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெற்று வரும் பயன்களையும் அவர் எடுத்துரைப்பார்.  மேலும் இப்பகுதிக்கு ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து, சாலை வசதி, விவசாயிகளுக்கு அளித்து வரும் சலுகைகள் ஆகியவற்றையும் எடுத்துரைப்பார்.  பிரதமர் வருகைக்கு பின்னர் இந்த தொகுதிகளில் நாங்கள் மத்திய அரசின் மூலம் கிடைத்துள்ள நன்மைகளை பொதுமக்களிடம் எடுத்துரைப்போம். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

கூட்டணி
பிஜேபி கூட்டணி குறித்து பிரதமர் அறிவிப்பாரா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதுபற்றி தெரியாது என்று வானதி சீனிவாசன் கூறினார். ஆனால் அரசியல் வட்டாரத்தில் பிஜேபி கூட்டணி பற்றி பிரதமர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.