வேலூர், பிப்.9: வேலூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து இழுத்ததால் கீழே விழுந்து லாரியில் சிக்கி உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையை சேர்ந்த விக்ரம் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கண்ணமங்கலத்தில் இருந்து வேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கணியம்பாடி தாலுகா காவல் நிலையம் எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை கண்டதும் அவர்கள் வேகமாக வாகனத்தை ஓட்டிச்செல்ல முயற்சித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த விக்னேஷ் பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களின் உடையை பிடித்து இழுத்து காவல்துறையினர் கீழே தள்ளியதால் அவர்கள் மீது லாரி ஏறி உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அதிச்சியடைந்த இருவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.