சென்னை, பிப்.9: திமுக கூட்டணியில் நடிகர் கமல ஹாசன் சேர்ந்து எங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. முன்னதாக தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்துக்கு அழகிரி சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறு கையில், மதச்சார்பற்ற தன்மையை காப்பாற்றுவதுதான் எங்கள் கூட்டணியின் முதன்மை நோக்கம். கூட்டணியில் உள்ள கட்சிகள் சில தவறுகள் செய்திருக்கலாம். அதை பார்க்க வேண்டிய நேரம் இதுவல்ல. நடிகர் கமலஹாசன் எங்கள் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கூட்டணி யில் சேர வேண்டும் என்றார். இதன் பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

முன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன். கே.எஸ்.அழகிரிக்கு என்னுடைய பரிபூரண ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. என்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக தான் இருந்தது. ஆனால் தலைவர் ராகுல்காந்தியை நேரில் பார்த்தபோது அந்த வருத்தம் காணாமல் போய்விட்டது. தற்போது தேர்தல் பிரசார குழுவில் இருக்கிறேன். விரைவில் தேர்தல் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் வரவேற்று பேசினார். கார்த்தி சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் வாழ்த்தி பேசினர். கே.எஸ்.அழகிரி மற்றும் எச்.வசந்த குமார், மயூரா ஜெயக்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மோகன் குமாரமங்கலம் ஆகிய செயல் தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.