சென்னை, பிப்.9: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக் கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாஹூ கூறியுள்ளார்.
சென்னையில் இன்று வாக்காளர் களுக்கு மாதிரி வாக்குப்பதிவை செய்து காட்டும் விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கிவைத்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற இருப்பதையொட்டி தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 30-ந் தேதியே வெளியிடப்பட்டு விட்டது.

இதையடுத்து 39 மக்களவை தொகுதி களிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களவை தொகுதிகளில் வாக்குச் சாவடி அமைவிடங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு வாகனங் களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கார்த்திகேயன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மக்களவை தொகுதிகளிலும் 3754 வாக்குச் சாவடி மையங்கள் 913 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குகளை செலுத்தி சரிபார்ப்பு தணிக்கை எந்திரம் மூலம் (விபாட்) யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் செயல் விளக்கமும் வாக்குச்சாவடி மையங் களில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 32 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்திலும் 120 மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு பின்னர் அவை கணக்கிட்டு சரிபார்க்கப்படும். செயல்முறை விளக்கத்தின் போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படும். 100 சதவீதம் வாக்களிப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யபிரத சாஹூ கூறுகையில், தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.

இப்போது தொடங்கப்பட்டுள்ள மாதிரி வாக்குப்பதிவு செய்முறை 10 நாட் களுக்கு நடைபெறும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப் படுத்தும தணிக்கை எந்திரம் எல்லா வாக்குப்பதிவு எந்திரங்களிலும் பொருத்தப்படும். மக்களவை தேர்தலுடன் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக் கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.