சென்னை, பிப்.9: மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட திட்டத்தின் நிறைவாக ஏஜி-டிஎம்எஸ் வண்ணாரப்பேட்டை வரையிலான ரெயில் பாதையை பிரதமர் மோடி மற்றும் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை பிற்பகலில் திறந்து வைக்கிறார்கள்.  திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடைபெறும் இவ்விழாவை  சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காணொலி காட்சி வாயிலாக கண்டுகளிக்கலாம்.

இந்நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட திட்டம் ரூ.19,058 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நிறைவு பகுதியாக நீல வழித்தடத்தில் ஏஜி-டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான இறுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி நாளை துவக்கி வைக்க உள்ளார். இந்த வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்ஐசி அரசினர் தோட்டம், உயர்நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டையில் சுரங்கப்பாதை மற்றும் ரெயில் நிலையங்களையும் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் துவக்கி வைக்கிறார்.

இதற்கான விழா நாளை பிற்பகல் 3.15 மணிக்கு திருப்பூரை அடுத்த பெருமா நல்லூரில் நடைபெறுகிறது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் காணொலி காட்சி வாயிலாகவும் இதனை கண்டுகளிக்கலாம்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பகல் 12.55 மணிக்கு புறப்படுகிறார். 2.35 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடை கிறார்.

இங்கிருந்து 2.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு பெருமா நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். 3.15 மணிக்கு நடைபெறும் விழாவில் மெட்ரோ ரெயிலின் இறுதி வழித்தடப் பணியில் பயணிகள் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள். இதுதவிர பல்வேறு நலத்திட்டங் களையும் பிரதமர் துவக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி, மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சபாநாயகர் ப.தனபால், மாநில மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அமைச்சர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை டெல்லியில் இருந்து வந்துள்ள தேசிய பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். மேடை மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயிலின் முதல் கட்டப் பணியில் மொத்தம் 45 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரெயில் பாதை அமைக்கப் பட்டு உள்ளது. 32 ரெயில் நிலையங் களில் 13 உயர்மட்ட நிலையங்களா கவும், 19 குளிரூட்டப்பட்ட சுரங்கப் பாதை ரெயில் நிலையங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு நடைமேடை, திரைக்கதவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.