சென்னை, பிப்.10:திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசன் சேர வேண்டுமென அழைப்பு விடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது காங். மேலிடத்தில் திமுக புகார் செய்துள்ளது. அழகிரியின் இந்த அழைப்பு திமுகவை வியப்பில் ஆழ்த்தியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில் மதசார்பற்ற சக்திகளை வலுப்படுத்தும் வகையில் எங்கள் கூட்டணியில் கமல்ஹாசன் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

கமல்ஹாசன் அடிக்கடி திமுகவும் ஊழல் கட்சி என்று குற்றம்சாட்டி வருவதால் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறாது என ஏற்கனவே அக்கட்சித் தலைவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். அழகிரி பேட்டி அளிப்பதற்கு ஒரு தினத்துக்கு முன்பு கூட மக்கள் நீதி மய்யம் தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இதனை கவனத்தில் கொள்ளாமல் கே.எஸ்.அழகிரி கமல்ஹாசனுக்கு திடீரென விடுத்த அழைப்பு திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்தில் தங்களது அதிருப்தியை திமுக தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

அழகிரி தரப்பில் பதிலளிக்கையில், காங்கிரஸ்-திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர்ந்தால் வரவேற்பீர்களா என்று கேட்டதற்கு ஆம் என்று மட்டுமே அவர் கூறினார். இதைத்தவிர வேறு எதையும் அவர் சொல்லவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. கமல்ஹாசனின் முந்தைய பேட்டி மற்றும் அவரது அறிவிப்புகளை அழகிரி தெரிந்து கொள்ளாமல் அழைப்பு விடுத்திருக்கலாம் என்று மற்றொரு தகவல் கூறுகிறது.

மேலும் நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே சோனியா மற்றும் ராகுலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போதே திமுகவுடன் உறவை துண்டித்தால் காங்சிரசுடன் கூட்டணி சேர தயார் என கமல்ஹாசன் கூறியதாக ஒரு தகவல் வெளியானது. கமலின் இந்த நிபந்தனையை காங்கிரஸ் தலைமை அப்போதே நிராகரித்து விட்டது.
இந்த நிலவரம் எதையும் தெரிந்து கொள்ளாமல் அழகிரி அளித்த பேட்டி திமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.