சென்னை, பிப்.11:சென்னையில் இன்று நடந்த திமுக எம்எல்ஏ மகள் திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.

அரசியலில் எதிரும்புதிருமாக இருப்பவர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் மகள் டாக்டர் ஆர்.பிரியதர்ஷினி- கே. வருண் திருமண விழா இன்று திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

இந்த திருமணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அவருடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி., எம்எல்ஏக்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் மு.ஈஸ்வரன், பிஜேபியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
கமல்ஹாசன் குறித்து திமுகவின் அதிகார நாளேடான முரசொலியில் கடுமையாக தாக்கி இன்று விமர்சனம் செய்துள்ள நிலையில், மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஒரே மேடையில் இன்று கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.