சென்னை, பிப்.12: பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்.19-ந் தேதிக்கு பதிலாக அவர் மார்ச் மாதம் 1-ல் வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிஜேபியை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி தமிழகம் வந்த மோடி, மதுரையில் நடைபெற்ற விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பிஜேபி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அதன்பின்னர் கடந்த 10-ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற பிஜேபி பொதுக்கூட்டத்தில் பேசினார். மேலும், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து பிப்ரவரி 19-ந் தேதி மீண்டும் மோடி, கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் பிஜேபி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதிக்குப் பதில், மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளதாக பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.