எல்லா நிகழ்ச்சிக்கும் தேசிய கீதம் கட்டாயம் அல்ல: ஐகோர்ட்

சென்னை

சென்னை, பிப்.12: பிரதமர் மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படாததற்கு காரணமான, சம்பந்தப்பட்ட அரசுத்துறை செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வில்லை.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி,  சென்னையைச் சேர்ந்த வேம்பு என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. தேசிய கீத விதிகளின்படி, பிரதமர் மற்றும் முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல என கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் .