சேலம், பிப்.12: சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ரஜினி பழனி மீது சீமான் கட்சியினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த பழனி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர் ரஜினி பழனி. இவர் ரஜினிக்கு எதிராக பேசுபவர்களுக்கு சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிலளித்து வருவார். சமீபத்தில் நாம் தமிழர் அமைப்பின் நிறுவனர் சீமான், ரஜினி பற்றி அவதூறாக பேசி இருந்தார். இந்த பேச்சுக்கு ரஜினி பழனி சமூக வலைதளம் மூலம் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சேலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ரஜினி பழனி மீது சீமான் கட்சியைச் சேர்ந்த சிலர் அரிவாளால் வெட்டி கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்து ரத்தம் சொட்டச்  சொட்ட ரஜினி பழனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் தன்னை சீமான் கட்சியை சேர்ந்தவர்கள் வெட்டிவிட்டு தப்பி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. படுகாயமடைந்த ரஜினி பழனி சிகிச்சைக்காக சேலம் அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி பழனியை சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனிடையே பழனி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.