சென்னை, பிப்.12: வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தேர்தலுக்கானது அல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.  சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது நடந்த காரசாரமான விவாதம் வருமாறு:-

பொன்முடி: எதிர்க்கட்சி தலைவர் கூறியது போல, இது நிழல் பட்ஜெட் தான். ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்காமல் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.  துணை முதல்வர்: நாங்கள் (அதிமுக) எப்போதும் தாக்கல் செய்வது நிஜ பட்ஜெட் தான். நாங்கள் நிஜ பட்ஜெட்டை எப்போதும் தாக்கல் செய்வதால் தான் 32 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட கட்சியே ஆட்சிக்கு வந்தது என்றும் நிஜ பட்ஜெட் தாக்கல் செய்வதால் தான் நாங்கள் ஆளும் வரிசையில் இருக்கிறோம். நிழல் பட்ஜெட்டையே தாக்கல் செய்த நீங்கள் (திமுக) எதிர் வரிசையில் இருக்கிறீர்கள்.
பொன்முடி: நிழல் பட்ஜெட் இல்லை என்றால், 2000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவித்திக்கலாமே?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தேர்தலுக்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. தொழிலாளர்கள், இது ஏழை மக்களுக்காக வழங்கப்படுகின்ற திட்டம். பல மாவட்டங்களில் வறட்சி உள்ளது. உங்கள் மாவட்டத்தில் கூட பருவமழை சரியாக பெய்யவில்லை.அதனால் விவசாய தொழிலாளர்களுக்கு போதுமான வருமானம் இல்லை. அதே போல கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. வறுமையிலேயே அவர்கள் இருக்கின்ற காரணத்தால் எல்லாவற்றையும் ஆராய்ந்து இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறோம்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அத்தனை பேருக்கும் இது கொடுக்கும். இதில் கட்சி வேறுபாடு ஏதுமில்லை. இதை அறிவித்தது தவறு என்று உறுப்பினர் சொல்கிறாரா?

பொன்முடி: அறிவிக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அதை பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாம். எதற்கு 110ல் அறிவிக்க வேண்டும்?
துணை முதல்வர்: முதல்வருக்கு 110ல் எந்த அறிவிப்பையும் வெளியிட உரிமை உள்ளது.
பொன்முடி: தமிழகத்தில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் வந்துள்ளனர். சரியாக விவசாய கடன் செலுத்தினால் வட்டி குறைப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களின் பிரதான கோரிக்கையை ஏற்று விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

செல்லூர் ராஜூ: கடனை தள்ளுபடி செய்யுமாறு எந்த விவசாயியும் கேட்கவில்லை. சரியாக கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி குறைக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
பொன்முடி: அத்தி கடவு அவிநாசி திட்டம் இந்த மாதத்தில் அடிக்கல் நாட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகள் முன்பு இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது.அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

முதல்வர்: பழைய திட்டம் என்பது மலையில் தொடங்குவதாக அமைந்திருந்தது, அது வனத்துறை அனுமதி பெற வேண்டியிருந்தால், தற்போது அந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கான நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த மாத இறுதியில் கண்டிப்பாக அத்திகடவு அவிநாசி திட்டம் அடிக்கல் நாட்டப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.