சென்னை, பிப்.13: சென்னை மெட்ரோ ரெயிலில் இன்றும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முந்தைய 3 நாட்களை விட இன்று கூட்டம் அதிகமாக இருந்தது.

வண்ணாரப்பேட்டை-ஏஜி.டிஎம்எஸ் இடையிலான சுரங்க வழித்தடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டதில் இருந்து மெட்ரோ ரெயிலை பிரபல படுத்துவதற்காக அனைத்து வழித்தடங்களிலும் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த திங்கள் கிழமை முதல் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு குடும்பம் குடும்பமாக சென்று வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக 55 ஆயிரம் பேர் பயணம் சென்ற நிலை மாறி லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்து வருகிறார்கள். கடந்த 4 நாட்களில் சுமார் 5 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

மீனம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஏஜி.டிஎம்எஸ், ஆயிரம்விளக்கு, எல்ஐசி, சென்ட்ரல், மண்ணடி வழியாக வண்ணாரப்பேட்டை செல்லும் மார்க்கத்தில் பிற மார்க்கங்களை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட் டைக்கு 40 நிமிடத்தில் வர முடிகிறது. இதனால் வடசென்னைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசல் மற்றும் புழுதியிலிருந்து விடுபட முடிகிறது.

குடும்பத்துடன் வருபவர்கள் ஒவ்வொருரெயில் நிலையங்களிலும் இறங்கி உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையங்களையும் எஸ்கலேட் டர்களையும் வியப்புடன் பார்க்கிறார்கள். பிற ரெயில் நிலையங்களை விட வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்தில் தான் எப்போது பார்த்தாலும் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்று மக்கள் வடசென்னையின் பிற இடங்களுக்கு செல்கிறார்கள்.

ராயப்பேட்டை, வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வருகிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆசியாவிலேயே முதன்மையானது என்பதால் இங்கு ஏராளமானோர் இறங்கி 100 அடி உயரத்திற்கு எஸ்கலேட்டரில் மேலே சென்று கோயம்பேடு மார்கத்தில் பயணிக்கிறார்கள்.

ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கும், தூசி மற்றும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கும் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக அதிக கூட்டம் இருந்ததால் மெட்ரோ ரெயில் நிலையங்களில் சிலர் துப்புவதையும், குப்பைகளை போடுவதையும் தடுக்க முடியவில்லை. மகளிருக்கான பெட்டிகளில் ஆண்கள் பயணம் செய்வதை தடுப்பதற்கும் போதிய ஊழியர்கள் இல்லை. இருப்பினும் மேற்பார்வையாளர்கள் ஆங்காங்கே நின்று கொண்டு பயணிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் கழிவறை வசதிகள் அதிக தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.வண்ணாரப்பேட்டையில் இருந்து ரெயில் ஏறிய சில பயணிகள் கூறுகையில், ரூ.60, ரூ.50 என்று இருக்கும் கட்டணத்தை சற்று குறைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் சுரங்கப்பாதை வழியாக ரெயில் செல்வது மெய்சிலிர்க்க வைப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இலவச பயணம் முடிவடைந்த பிறகு தான் பயணிகளின் எண்ணிக்கை பற்றி முழுவிவரம் தெரியவரும். இருப்பினும் பராமரிப்பு செலவுகளை கணக்கிடும் போது கட்டணத்தை குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்றனர்.

மேலும் சுரங்கப்பாதை வழியாக ரெயில் செல்லும் போது ஒருவகையான இரைச்சல் கேட்கிறது. இந்த சமயத்தில் அறிவிப்புகளை சரியான முறையில் கேட்க முடியவில்லை. இருப்பினும் எழுத்துக்கள் ஓடுவதை பயணிகள் கவனித்து அடுத்து நிற்கும் நிலையம், கதவுகள் திறக்கும் பக்கம் ஆகியவற்றை துல்லியமாக கவனித்து இறங்குகிறார்கள். மேல் மட்டபாதைக்கு ரெயில் வரும் போது புதிய பயணிகள் சற்று நிம்மதியடைகிறார்கள். சுரங்க வழித்தடத்தில் செல்லும் போது ஒரு புதிய அனுபவத்தை அனுபவிக்கிறார்கள்.

அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதியை குழந்தைகள் வரை பெரியவர்கள் அனுபவித்து மகிழ்கிறார்கள்.