சென்னை, பிப்.13: தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், நாளை வழக்கை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசின் சிறப்பு நிதியுதவி திட்டம் தொடர்பாக பிப்ரவரி 11ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதில் தமிழகம் முழுவதும் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் இந்த நிதியுதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் ஆஜராகி முறையீடு செய்தார். தமிழக அரசு புள்ளி விவர அடிப்படையிலேயே, மொத்த மக்கள் தொகையில் 11.9 சதவீதம் பேர் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். அதனடிப்படையில் 18 லட்சம் பேர் மட்டுமே பலனடைய தகுதியுடையவர்கள். ஆனால் அரசு கூடுதலாக 42 லட்சம் பேர் பலனடையும் வகையில் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. தேர்தலை கணக்கில் கொண்டு அரசு அறிவித்த இந்த அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்தார்.

தேவையற்றவர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவதால், பொதுமக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. உண்மையிலேயே வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

செந்தில் ஆறுமுகத்தின் முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.