வாய்ப்பு வந்தால் விஜய்யுடன் மீண்டும் நடிப்பேன்: ஜெய் பேட்டி

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் ஜெய் அவ்வப்போது கிசுகிசுவிலும் சிக்குவார்.

தனது எதிர்கால படங்கள் பற்றியும், திருமணம் பற்றியும், மாலைச்சுடருக்கு ஜெய் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

கேள்வி:- நீயா-2 படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
பதில்:- நீயா படத்திற்கும், நீயா-2 படத்திற்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன. பெயரும், பாம்பும் மட்டுமே இரண்டிலும் இருக்கும். இதில் 2 விதமான கேரக்டர்கள் எனக்கு உள்ளது. வரலட்சுமி, லட்சுமிராய், கேத்ரினா ஆகியோர் நடிக்கின்றனர். படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

கே:- அறம் இயக்குனர் படத்தில் நடிப்பீர்களா?
ப:- ஆம். அறம் படத்தை இயக்கிய கோபிநயினார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. கால்பந்தாட்டம் மற்றும் அதிலுள்ள அரசியல் சம்மந்தப்பட்ட கதை. இதில் வடசென்னை பகுதியை சேர்ந்த கால்பந்தாட்ட வீரராக நடிக்கிறேன். இதற்காக கால்பந்தாட்டம் குறித்து சிறப்பு பயிற்சி எடுக்கிறேன். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

கே:- பார்டி படம் எந்த அளவில் உள்ளது.
ப:- பார்டி ரெடியாகி விட்டது. அதில் காமெடி கலந்த நெகட்டிவ் கதாபாத்திரம். வெங்கட்பிரபுவின் வழக்கமான ஸ்டைலிஸ் படமாக வந்துள்ளது. பிரேம்ஜியின் இசை படத்திற்கு கூடுதல் பலம். இன்னும் இரண்டு மாதங்களில் பார்டி படம் ரசிகர்களுக்கு ரெடி.

கே:- மம்முட்டியுடன் நடித்த அனுபவம் எப்படி?
ப:- மதுரை ராஜா என்ற மலையாள படத்தில் மம்முட்டிக்கு தம்பியாக நடித்துள்ளேன். அவருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாதது. இதில் எனக்கு ஜோடியாக மஹிமாநம்பியார் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் நீயும் பிசியான நடிகராக மாறிவிடுவாய் என்று மம்முட்டி என்னிடம் கூறினார்.

கே:- வேறு புதிய படங்களில் நடிக்கிறீர்களா?
ப:- தற்போது நடித்து வரும் இந்த 4 படங்களை தவிர கிராபிக்ஸ் கலைஞர் ஆண்ட்டூஸ் பாண்டியன் இயக்க உள்ள அறிவியல் சார்ந்த பேண்டஸி படத்தில் நடிக்கிறேன். அதுவும் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. இதில் கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

கே:- விஜய்யுடன் மீண்டும் நடிப்பீர்களா?
ப:- பகவதி படத்தில் நடித்த பிறகு நான் காத்துக்கொண்டு இருந்தேன். அப்போது விஜய் என்னை அழைத்து என்னுடன் தொடர்ந்து நடித்தால் உன்னால் தனித்துவமாக வர முடியாது என்றார். அதன்பிறகே சென்னை 28 படத்தில் நடித்தேன். மீண்டும் பகவதி படம்போல் நல்ல கேரக்டர் கிடைத்தால் நிச்சயம் அவருடன் நடிப்பேன்.

கே:- காதல், கல்யாணம் ஏதாவது உண்டா?
ப:- இப்போதைக்கு காதலும் இல்லை. கல்யாணமும் இல்லை. இந்த ஆண்டு அதிக படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதால் அது பற்றி யோசிக்கவில்லை.

கே:- சுப்ரமணியபுரம்-2 படம் உருவாக வாய்ப்பு உள்ளது.
ப:- நானும், சசிகுமாரும் மீண்டும் இணைய உள்ளோம். அது அவர் இயக்கத்தில் சுப்ரமணியபுரம்-2 படமாகவும் இருக்கலாம். அல்லது அதைவிட சிறப்பான கதையாகவும் இருக்கலாம்.
— விஜய் ஆனந்த்