ஐ.எஸ்.எல். அரையிறுதி: மும்பை-நார்த் ஈஸ்ட் இன்று பலப்பரீட்சை

விளையாட்டு

மும்பை, பிப்.13: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் இன்று நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில், மும்பை சிட்டி அணியுடன், நார்த் ஈஸ்ட் அணி மல்லுக்கட்டவுள்ளது.

மும்பை அரினா அரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஆசிய கோப்பை 2019-க்கு முன்பு பலமாக இருந்த மும்பை அணி அதன்பின் சற்று பலவீனமாகி தொடர் தோல்விகளை தழுவியது. இந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் உயரவும், தொடரில் நீடிக்கவும் இன்றைய போட்டி மும்பை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்த அணியின் பயிற்சியாளர் கோஸ்டா, நாங்கள் எங்கள் அணியின் பாணியை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. நார்த் ஈஸ்ட் ஒரு சிறந்த மற்றும் உற்சாகம் மிகுந்த அணி என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்தியாவின் மிகச் சிறந்த அணிகளுள் ஒன்று. இதனால் நாங்கள் சிறப்பாக ஆட முடிவு செய்துள்ளோம். குறைந்தது மூன்று புள்ளிகளை எடுக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம் என்றார்.

நடப்பு சீசனில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 8-ல் வெற்றியும் 4-ல் தோல்வியும் அடைந்து 27 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. நார்த் ஈஸ்ட் அணியும் 15 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் கண்டு 24 புள்ளிகளுடன் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. புள்ளிகளை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் சிறிய அளவிலேயே இடைவெளி இருப்பதால், இன்றைய போட்டியை கைப்பற்ற இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை.