புதுச்சேரி, பிப்.14:புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று 2-வது நாளாக கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தெருவிலேயே படுத்து உறங்கி சமையல் செய்து சாப்பிட்டு போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்தில் இருந்து அதிரடிப்படை புதுச்சேரி சென்றுள்ளது.

துணை நிலை கவர்னர் கிரண்பேடி யின் உத்தரவின் பேரில் டிஜிபி சிவகாம சுந்தரி நந்தா மேற்பார்வையில் புதுச் சேரி முழுவதும் கடந்த 2 நாட்களாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்ப தால் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்பினரும் அதிருப்தி அடைந் துள்ளனர்.

இந்த நடவடிக்கையை திரும்ப பெறக்கோருதல் மற்றும் அரசு சார்ந்த நிறுவன ஊழியர்களுக்கு 18 மாதங் களாக சம்பளம் வழங்கப்படாதது பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசிக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட 39 கோரிக்கை களை வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று மதியம் 2 மணிக்கு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டி ருந்தபோது நாராயணசாமி தலைமை யில் அமைச்சர்கள் நமச்சிவாயம், அல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, கமலக்கண்ணன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் ஊர்வல மாக ராஜ்நிவாஸ் சென்றனர். அங்கு கிரண்பேடியை கண்டித்து கோஷமிட்டவாறு தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணிக்கு தர்ணாவை விலக்குமாறு கிரண்பேடி கடிதம் கொடுத்து அனுப்பினார். ஆனால் அதை ஏற்காமல் இரவு முழுவதும் நாற்காலி மற்றும் தரையில் அமர்ந்த வாறு தர்ணாவில் ஈடுபட்டனர். நள்ளிரவுக்கு பிறகு நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அங்கேயே படுத்து உறங்கினார்கள்.

இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது. அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து உணவு வழங்கப் பட்டது.காலை 10.30 மணி அளவில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோரும் தர்ணாவில் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டம் காரணமாக புதுச் சேரியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக அரக்கோணத்தில் இருந்து அதிரடிப்படை வரவழைக்கப்பட்டு இருக்கிறது.இந்த சூழ்நிலைக்கு இடையே துணை நிலை கவர்னர் கிரண்பேடி இன்று காலை சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிரடிப்படை உதவியுடன் ராஜ்நிவாசில் இருந்து புறப்பட்டு சென்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி காங்கிரஸ் விவகாரத்தை கவனித்து வரும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாராயணசாமியுடன் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தொலைபேசியில் பேசியபோது போராட்ட விவரங்களை கேட்டறிந்ததுடன் போராட்டம் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் ஆங்கில பத்திரிகை ஒன்றின் விழாவில் பங்கேற்கும் கிரண்பேடி இங்கிருந்து டெல்லி செல்வார் என்றும், 21-ந் தேதிதான் அவர் புதுச்சேரி திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே இன்று காலை 10 மணியளவில் கவர்னர் மாளிகை வாசலில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கையில் கொடியுடன் திரண்டனர். கிரண்பேடியே வெளியேறு என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முருகன் தலைமையில் அக்கட்சியினர் தபால் அலுவலகம் முன்பு திரண்டு கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், கிரண்பேடி கவர்னர் மாளிகையை விட்டு வெளியே சென்றிருப்பது எங்களது போராட்டத் திற்கு கிடைத்த வெற்றியை காட்டுகிறது.அவர் திரும்பி வரும் வரை போராட்டம் தொடரும். எங்களை கைது செய்தாலும் கவலையில்லை என்றார்.