சென்னை, பிப்.14: கொலை வழக்கு விசாரணைக்காக சென்னை அழைத்துவரப்பட்ட மதுரையை சேர்ந்த தண்டனை கைதி, தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் மூன்று போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (எ) தொந்தி கணேசன் (வயது26). கொலை மற்றும் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, 2016-ம் ஆண்டு சென்னையில் தங்கி லாரி டிரைவராக கணேசன் வேலை பார்த்து வந்தபோது, கொருக்குப்பேட்டையை சேர்ந்த லஷ்மி என்ற பெண்ணை கொலை செய்ததாக தெரிகிறது.

இது குறித்து, வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள மகிளா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கணேசனை ஆஜர்ப்படுத்துவதற்காக, 3 போலீசாரின் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

வழக்கு விசாரணை முடிந்ததும், மின்சார ரெயில் மூலம் பெருங்களத்தூர் வந்தடைந்துள்ளனர். பின்னர், மதுரைக்கு பஸ் ஏறுவதற்காக பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்துள்ளனர். கணேசனுக்கு கைவிலங்கு போடவில்லை என்று கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாரதவிதமாக போலீசின் பிடியில் இருந்து தொந்தி கணேசன் தப்பியோடினார். ரெயில் தண்டவாளங்களை தாண்டி ஓடிக்கொண்டிருந்த கணேசனை போலீசார் துரத்தி சென்றனர். அப்போது, திடீரென ரெயில் வந்ததால் கணேசனை பிடிக்க இயலாமல் போனது. இது குறித்து, தகவலின்பேரில், தொந்தி கணேசனின் தோற்றம் மற்றும் அவனின் அங்க அடையாளங்களை வைத்து பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, கணேசனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கணேசனின் சொந்த ஊர் மற்றும் மதுரையிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.