சென்னை, பிப்.16: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 12 மாதங்களில் காலா, 2.0, பேட்ட என மூன்று படங்கள் மூலம் ரூ 1500 கோடிக்கு மேல் வசூலை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்த புதுப் படத்துக்குத் தயாராகி வருகிறார். ரஜினியின் 166-வது படமாக உருவாக உள்ள இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும்தான் வெளியாகவில்லை. மற்றபடி அனைத்து தகவல்களையும் மீடியாக்கள் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகிறது.

இந்தப் புதிய படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  பேட்ட படத்தில் பட்டையக் கிளப்பிய அனிருத் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். இந்நிலையில் யாரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வது என்று இயக்குனர் பரிசீலித்து வந்த நிலையில் தற்போது ஏகமனதாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

அதே போல் யோகி பாபுவும் இந்த படத்தில் ரஜினியுடன் முதல் முறையாக காமெடியனாக நடிக்கிறார்.
2.0 படத்துக்கு பிறகு லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.