சென்னை, பிப்.17:வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், சட்டமன்ற தேர்தலே தங்கள் இலக்கு என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக பிஜேபி,காங் உள்ளிட்ட மாநில கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி அமைய உள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதே போன்று அதிமுக, பிஜேபி இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருகை தந்து, தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இப்படி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் நிலைப்பாடு பற்றி அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது பிஜேபி உள்ளிட்ட கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற தேர்தல் குறித்து ரஜினி தனது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இன்று காலை ரஜினி தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் காலை 9 மணி முதல் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினர். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், நாடாளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து விரிவாக ஆலோசித்த பின்னர், ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றம் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னை தண்ணீர் வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.