சென்னை, பிப்.18:பதிவுத் திருமணம் செய்ததாக போலி ஆவணம் தயாரித்து தன்னை ஏமாற்றிய நடிகர் அபி சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நடிகை அதிதி மேனன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

டூரிங் டாக்கீஸ், சாகசம் ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். கடந்த 2016-ம் ஆண்டு இவரும், நடிகை அதிதி மேனனும் இணைந்து பட்டதாரி என்ற படத்தில் நடித்தனர்.

இந்த படத்திற்கு பிறகு ரகசியத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அபி சரவணனை யாரோ சிலர் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அதற்குப்பிறகு அபி சரவணனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதை தொடர்ந்து அவரது தந்தை போலீசாரிடம் தன் மகனை யாரே கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-நானும், அபி சரவணனும் ‘பட்டதாரி’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அதன் பிறகு எங்களுக்குள் நட்பு மட்டுமே உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு நடிகர் அபி சரவணன், நான் அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார்.

அவரே ஆள் வைத்து கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி விட்டு தன்னை கடத்தியதாக கூறுவது கட்டுக்கதை எனவும் தன்னை ஏமாற்றிய நடிகர் அபி சரவணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.