சென்னை, பிப்.18: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று நள்ளிரவில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடை எண்.125 அருகே நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

அந்த வழியாக சென்ற கூலித்தொழிலாளர்கள் இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் ஜான் சுந்தர், இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த பகுதியில் இருந்த கூலித் தொழிலாளரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இரவு 10.30 மணி அளவில் அந்த கடையின் முன்புறம் கொலைசெய்யப்பட்ட இளம் பெண்ணும், வாலிபர் ஒருவரும் அமர்ந்து ஓட்டலில் இருந்து வாங்கி வந்த டிபனை சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர் என்றும், பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனை தொடர்ந்து சண்டையிட்டதும் தெரியவந்தது.
அதனால் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவருடன் வந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுவரை அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.