சென்னை, பிப்.19: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இலங்கையில் நடந்த நான்காம் கட்ட ஈழப்போரில். அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது சிங்கள படை கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில், லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இப்போரை தடுத்து நிறுத்தும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசை வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தை ஒடுக்க நினைத்த அப்போதைய தமிழக அரசு, வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினரைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் சம்பவம் நடந்த 2009 பிப்ரவரி 19 ம் நாள் கரும் புள்ளியானது.

ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 19 ம் நாளை வழக்கறிஞர்கள் சமூகத்தினர் கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். இன்று பிப்ரவரி 19 ம் நாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்று தங்களது, கண்டங்களை பதிவு செய்தனர்.

இதன் பின்னர் பேட்டியளித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன்,  வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அப்போதைய காவல் ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்பிரமணி, துணை ஆணையர் பிரேம்ஆனந்த் சின்கா மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.