சென்னை,பிப்.19: பேருந்து மீது கல்வீசிய வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வென்ற ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து தமிழகத்தில் தற்போது 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

தமிழக இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி, பேருந்துகள் மீது கல்வீசியதாக தொடரப்பட்ட வழக்கு எம்பி,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

அந்த வழக்கில் தீர்ப்புஅளிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரதுஅமைச்சர் பதவி தானாகவே ரத்தானது.
தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
இதனைத்தொடர்ந்து, பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்ட ஓசூர் சட்டமனற் தொகுதி காலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக சட்டமன்ற செயலாளர் கி.சீனிவாசன்வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்,அளித்த தீர்ப்பை தொடர்ந்த ஓசூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பா.பாலகிருஷ்ணரெட்டி இந்திய அரசமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி பதவியை இழந்தது காரணமாக ஓசூர் சட்டமன்ற தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அறிவிக்கை தமிழக அரசு சிறப்பிதழில் இன்று வெளியிடப்பட்டது என்பது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.