வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. அதே கிராமத்தில் இன்ஜினியரிங் படித்து விட்டு தன்னுடைய நண்பர்களுடன் வேலை தேடி வருகிறார் நாயகன் விஜய் குமார்.
அந்த தொழிற்சாலையில் தன் நண்பர்களுடன் வேலைக்கு சேர்கிறார் விஜய்குமார். சேரும் முதல்நாளே தொழிலாளி ஒருவர், தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார். அதே தொழிற்சாலையில், டாக்டராக பணிபுரியும் நாயகி விஸ்மயாவும் விஜய்குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தொழிற்சாலையில் ஏற்படும் விஷவாயு கசிவால் தன்னுடைய நண்பர் ஒருவர் இறக்கிறார். ஏற்கெனவே வேறு ஒரு விபத்தில் இறந்த தொழிலாளியும், விஜய்குமாரின் நண்பரும் இறந்ததற்கான காரணம் ஒன்றுதான் என்று விஜய்குமாருக்கு தெரியவருகிறது.
தொழிலாளிகள் இறந்ததை வைத்து அந்த ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சங்கர், போராட்டம் நடத்தி தொழிற்சாலையை மூட வைக்கிறார். பின்னர் தொழிற்சாலையின் முதலாளி பணத்திற்கு ஆசைப்பட்டு ஆலையை அவரே திறக்க வைத்து விடுகிறார்.

சில நாட்களில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமல், தொழிற்சாலையில் இருந்து விஷவாயு வெளியேறி காற்றில் கலக்கிறது. இதனால், ஊரில் உள்ள மக்கள் பலரும் பாதிப்படைந்து இறக்கிறார்கள். இதில், தன்னுடைய பெற்றோரை இழக்கிறார் விஜய்குமார்.
அதன்பின் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் விஜய்குமார். இதற்கு காரணமாக செயல்படும் தொழிற்சாலை முதலாளி துரை ரமேஷுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.

இறுதியில் விஜய்குமார் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
உறியடி படம் போலவே இப்படத்திலும் ஆழமான, அழுத்தமான கருத்தை பதிவு செய்து இயக்கி நடித்திருக்கிறார் விஜய்குமார். தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்பு, அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், பொது மக்களை கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள் என அனைத்தையும் தோலுறித்து காட்டியிருக்கிறார்.

மருத்துவராக திரையில் தோன்றும் நாயகி விஸ்மயா, காதல், மக்களுக்காக போராடுவது என நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஜாதி கட்சி நடத்தும் அரசியல்வாதியாக வரும் சங்கர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். விஜய்குமாரின் நண்பர்களாக வரும் சுதாகர் மற்றும் அப்பாஸ் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தாவின் இசை இந்தபடத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் பாதிப்பையும் அழகாக பிரதிபலித்துள்ளார்.