சென்னை, பிப்.19: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உறுதியானது. பாமகவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பிஜேபி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை இறுதியாகி உள்ளது.

அதிமுக தலைமையில் 8 கட்சிகள் சேர்ந்து போட்டியிடும் மெகா கூட்டணி இறுதி வடிவம் பெற்று வருகிறது.

இதில் முதன் முதலாக அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக பிஜேபி, தேமுதிக, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் சென்னை வந்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இன்று மீண்டும் சென்னை வந்தார். அவர் நேரடியாக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கிரௌன் பிளாசா ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசி கூட்டணியை இறுதி செய்கிறார். அதன் பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு பியூஷ் கோயல் சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டுள்ள அதிமுக குழு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த மெகா கூட்டணி 48 மணி நேரத்தில் உறுதியாகி அறிவிப்பு வெளியாகும் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தங்களது கூட்டணி எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிக்கும் என்று கூறிய அவர், திமுக கூட்டணி கூட்ஸ் வண்டி போல உள்ளது என்று கூறினார்.

ஏற்கனவே நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையின்படி, அதிமுக-பிஜேபி ஆகியவை தலா 20 இடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 இடங்களில் ஒன்றை அக்கட்சி புதிய தமிழகத்துக்கு ஒதுக்கும். அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார். எஞ்சிய 20 தொகுதிகளில் 7 ஏற்கனவே பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் அளிக்கப்படும். எஞ்சிய 10 இடம் பிஜேபிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 7 இடங்களில் பிஜேபி போட்டியிடும். என்ஆர் காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் வழங்கப்படும். பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
முன்னதாக இன்று சென்னை வருவதாக இருந்த பிஜேபி தலைவர் அமித் ஷா வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை இடங்கள்?

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – 20
(கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடம்)

பாரதீய ஜனதா கட்சி – 10
(என்.ஆர். காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே தலா ஒரு இடம்)

பாட்டாளி மக்கள் கட்சி – 7

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் – 3