சென்னை, பிப்.19: வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட்டணி உறுதியாகி அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அதன்படி மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு 7 இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக முழு ஆதரவு அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

தேர்தல் களத்தில் எப்போதும் முன்னிலையில் செயல்படும் அதிமுக வரும் மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தில் மற்ற கட்சிகளை முந்தி கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது.
அதிமுக, பாமக ஆகியவை இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டது. அதன்படி சென்னை கிரௌன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இன்று சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நடைபெற உள்ள 2019 மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுகவும் பாமகவும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது. 2019-ம் ஆண்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாமக தனது முழு ஆதரவை அளிக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமதாஸ் பேட்டி

தற்போதைய கூட்டணி, மக்கள் நலக்கூட்டணியாகவும், வெற்றிக் கூட்டணியாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மெகா கூட்டணியான இது மக்கள் ஆதரவுடன் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதுபற்றி அன்புமணி ராமதாஸ் பிரத்யேகமாக பேட்டியளித்து விளக்குவார்.

அதிமுக கூட்டணியில் சேருவதற்கு நாங்கள் 10 கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் இந்த கோரிக்கைகளை வழங்கி உள்ளோம்.

காவிரி-கோதாவரி நதிகள் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும், அதே போல மணல் குவாரிகளை மூட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பத்து கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டுள்ளன.

இதை நிறைவேற்றுவதாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.