புதுடெல்லி, பிப்.21: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி யில் விளையாட, தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்
சில் ஐசிசியிடம், வலியுறுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, தீவிரவாதிகளை ஆதரித்து வரும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவதை தவிர்க்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஐசிசி தலைவர் ஷசாங்க் மனோகருக்கு கடிதம் எழுத பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நாளை மும்பையில் நடைபெற உள்ளது.

40 வீரர்கள் பலியாக காரணமான ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் எந்தவித கட்டுப் பாடுமின்றி இருப்பதை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட்டால் அந்த நாட்டுடன் வேறு எந்த அணியும் விளையாட இயலாத சூழல் ஏற்படும்.

தடை விதிக்காத பட்சத்தில், பாகிஸ் தான் அணியுடன் விளையாட இந்தியா மறுக்க நேரிடும். அப்போது பாகிஸ் தான் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் சந்திக்க நேர்ந்தால் பாகிஸ்தான் வென்றதாக கருதி கோப்பை வழங்கப்படும் ஆபத்தும் உள்ளது.

இந்த அனைத்து விஷயங்களையும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுமென பிசிசிஐ தெரிவித்துள்ளது.