சென்னை, பிப்.21: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு அரசு முகமைகளில் புதிய தொழில்நுட்பங்களை வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொழுத்தாகி உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு முகமைகளில் புதிய தொழில்நுட்பங்களான தொகுப்பு தொடர், இணையம் சார்ந்த பொருட்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மேற்கொள்ள உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிடும் வகையில், தமிழ்நாடு மின்னாளுமை முகமைக்கும், திருச்சிராப்பள்ளி – இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம், அரசுத் துறைகளில் உள்ள உயர் அலுவர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி மற்றும் சான்றிதழ் வகுப்புகள் நடத்துதல், மின்னணு மயமாக்கப்பட்ட கிராமப்புற திட்டங்கள் போன்ற முயற்சிகள் மூலம் கிராமம் மற்றும் நகர்புறங்களுக்கு இடையேயான மின் இலக்க இடைவெளியை சமன் செய்தல், அரசு மற்றும் அரசு சாரா முகமைகளில் சமூக பொறுப்பு ஆய்வு மேற்கொண்டு அதன் விளைவுகளை கண்டறிதல் போன்றவைகளுக்கு வழிவகை செய்யப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் சார்பில் அதன் ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சந்தோஷ் கே. மிஸ்ரா, திருச்சிராப்பள்ளி – இந்திய மேலாண்மை நிறுவனத்தின்
சார்பில் டாக்டர் பீமராயா மெட்ரி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

அரசு துறைகள் மற்றும் மின்ஆளுமையில் ஆராய்ச்சி மேற்கொள்ள உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிடவும், தமிழ்நாடு அரசின் கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற துறைகளில் திறன் மேம்பாடு செய்திடவும், மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு பகிர்தலுக்கான கருத்தரங்குகள் நடத்துதல் போன்ற பணிகளுக்காக தமிழ்நாடு மின்னாளுமை முகமை, அமெரிக்க நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் அதன் ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சந்தோஷ் கே. மிஸ்ரா, அமெரிக்க நிறுவனம் சார்பில் டாக்டர் எம்.கே. பத்மநாபன் ஆகியோர் கையெழுத்திட்டனர். மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியது.