சென்னை, பிப்.21: சென்னையில் திருமலா பால் நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட 31இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். விழுப்புரம், காட்பாடி, வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு தென்னிந்தியாவில் 2-வது பெரிய தனியார் பால் நிறுவனமாக செயல்படும் திருமலா, திருமலை நேசன் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறது. சென்னையில் மாதவரத்தில் உள்ள இந்நிறுவன அலுவலகங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதன் அதிபர்கள் ராமமூர்த்தி மற்றும் ராம ஆஞ்சநேயலு, பிரேமானந்தா ஆகியோர் இந்நிறுவனங்கள் மட்டுமின்றி ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்திருப்பதாகவும், அவற்றில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக ஐ.டி. வட்டாரம் தெரிவித்துள்ளது.

சென்னை, வேலூர், விழுப்புரம் ஆகிய இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 31 இடங்களில் சோதனை நடக்கிறது.
காட்பாடி காந்தி நகர் பகுதியில் ராமமூர்த்தி என்ற ரியல் எஸ்டேட் அலுவலகம், விழுப்புரத்தில் திருக் கோவிலூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடை ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சோதனையின் போது கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தொழிலதிபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ஐ.டி. வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.