புதுடெல்லி, பிப்.21: மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான அரசே ஆட்சி அமைக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

84 சதவீதம் பேர் மோடியே பிரதமராக வேண்டுமென விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ரபேல் போர் விமான விவகாரம் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று சுமார் 75 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘டைம்ஸ் நவ்’ ஆங்கில செய்தி தொலைக்காட்சி நடத்திய நாடு தழுவிய மெகா கருத்துக்கணிப்பில் 83 சதவீதம் பேர் மோடி தலைமையிலான ஆட்சியே அமையும் என்று கூறியுள்ளனர்.நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆன்லைன் மூலம் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப் பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர் மோடி தலைமை யிலான கூட்டணியே அமோக வெற்றி பெறுமென 83.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என 9.25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மோடி அல்லாத தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையுமென 4.25 சதவீதம் பேரும், மெகா கூட்டணி ஆட்சி அமையுமென 3.47 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு 84 சதவீதம் ஆதரவு

மீண்டும் யார் பிரதமர் என்ற கேள்விக்கு 83.89 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 8.33 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு உள்ளது.

மம்தா பானர்ஜிக்கு 1.44 சதவீதமும், மாயாவதிக்கு 0.43 சதவீதமும், மற்றவர் களுக்கு 5.92 சதவீதமும் ஆதரவு காணப்படுகிறது. 2014 தேர்தலை விட ராகுல் காந்திக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 63.3 சதவீதம் பேர் இல்லை என்றும், 31.15 சதவீதம் பேர் ஆம் என்றும் கூறியுள்ளனர். 5.82 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மிகப்பெரிய சாதனை கடந்த 5 ஆண்டு மோடி அரசின் மிகப் பெரிய சாதனையாக, ஏழைகள் மத்திய அரசை எளிதில் அணுக முடிவதாக கூறப்பட்டுள்ளது.

34.39 சதவீதம் பேர் இதற்கு ஆதரவு அளித்துள்ளனர். ஜிஎஸ்டியே அரசின் மிகப்பெரிய
சாதனை என்று 29.09 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தூய்மை இந்தியாவுக்கு 18.68 சதவீதம் பேரும், துல்லிய தாக்குதலுக்கு 17.84 பேரும் சிறந்த சாதனை என தெரிவித்துள்ளனர்.

மோடி அரசின் மிகப்பெரிய தோல்வி என்னவென்று கேட்கப்பட்ட கேள்விக்கு ராமர் கோவில் கட்டப்படாதது என 35.72 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் 29.52 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை 13.50 சதவீதம் பேர் தோல்வி என கூறியுள்ளனர். சகிப்புத்தன்மையின்மை அதிகரித்துள்ளதாக 12.97 சதவீதம் பேரும், மற்ற பிரச்சனைகள் என 8.29 பேரும் கூறி உள்ளார்.

ரபேல் போர் விமானப் பிரச்சனை இந்த தேர்தலில் பிஜேபிக்கு பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என 74.59 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இது தாக்கத்தை ஏற்படுத்தும் என 17.51 பேரும், கருத்து தெரிவிக்க 7.95 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
10 சதவீத இடஒதுக்கீடு மோடி அரசுக்கு மிகவும் உதவுமென 72.66 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதனால் பயனில்லை என 15.25 சதவீதமும், கருத்து தெரிவிக்க முடியாது என 12.9 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்த மோடி அரசின் செயல்பாடு மிக நன்றாக உள்ளது என 59.51 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நன்று என 22.29 சதவீதம் பேரும், சராசரி 8.25 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். மோசம் என 9.94 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர்.