விழுப்புரம், பிப்.23: விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன், திண்டிவனம் அருகே இன்று காலை காரில்  சென்று கொண்டிருந்தபோது சாலை தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஆதனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக எம்.பி.யாக உள்ள இவர், மனைவி சாந்தா, மகன் விக்னேஷ், மகள் திவ்யா தீபிகாவுடன்  சென்னையில் வசித்து வருகிறார்.

அதிமுக கூட்டணியில் இணைந்ததை கொண்டாடும் வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்பட அதிமுக பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜேந்திரன் எம்.பி., திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் அங்கிருந்து கார் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் பகுதியை  சேர்ந்த அஜித் (வயது 24) என்பவர் காரை ஓட்டிச்சென்றுள்ளார். நண்பர் தமிழ் என்பவரும் உடன் பயணித்ததாக கூறப்படுகிறது.

காலை 6 மணியளவில் திண்டிவனம் அருகே சுலோச்சனா பங்காரு திருமண மண்டபம் எதிரே சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டிவனம் போலீசார், படுகாயமடைந்த எம்.பி., மற்றும் கார் ஓட்டுநரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  ஆனால், சிகிச்சை பலனின்றி சில மணிநேரங்களிலேயே எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார். கார் ஓட்டுநர் அஜித், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ராஜேந்திரனுக்கு சாந்தா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 2001 விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், 2006-ல் வானூர் ஒன்றிய பேரவை இணை செயலாளராகவும், 2011-ல் மாவட்ட கவுன்சிலராகவும், மாவட்ட விவ
சாய அணி செயலாளராகவும் ராஜேந்திரன் பொறுப்பு வகித்துள்ளார்,  என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர், துணைமுதல்வர் நேரில் அஞ்சலி
எம்.பி. மரணம் குறித்து அறிந்ததும், அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனைக்கு சென்று இரங்கல் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ராஜேந்திரன் எம்.பி. உடல் வைக்கப்பட்டுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
முதலமைச்சர் இரங்கல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் இன்று அதிகாலை (23-ந் தேதி)
சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனையும், பெரும் துயரமும் அடைந்தேன்.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றிய எஸ். ராஜேந்திரன் கட்சித் தலைமையின் மீது பற்றும், பாசமும், கழக கொள்கைகளின் மீது உறுதியும் கொண்டவர். ராஜேந்திரன் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பாடுபட்டவர். அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர். இவர் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். தொகுதி மக்களின் பேரன்பைப் பெற்றவர். ராஜேந்திரனின் இழப்பு அதிமுகவிற்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும்.

ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அதிமுக உடன்பிறப்புகளுக்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜேந்திரனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.