பெங்களூரு, பிப்.23: பெங்களூருவில் நடைபெற்ற விமானக் கண்காட்சி மற்றும் டிரோன் ஒலிம்பிக்கில் நடிகர் அஜித் தலைமையிலான தக்ஷா குழு 3 பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் டிரோன் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். நடிகர் அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் கைதேர்ந்தவர். மேலும் டிரோனை இயக்குவதிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

அஜித் தலைமையிலான இந்த குழு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் சர்வதேச அளவில் 2-ம் இடம் பிடித்தது. இதனிடையே சமீபத்தில் கோவாவில் இருந்து சென்னைக்கு வந்த அஜித் அங்கிருந்து ஜெர்மனிக்கு கிளம்பிச் சென்றார். தக்ஷா குழுவின் அடுத்த திட்டத்திற்காக ஏரோமாடலிங் குறித்து ஆராய்ச்சி செய்யவே அஜித் ஜெர்மனி சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள வாரியோ ஹெலிகாப்டர் நிறுவன தலைவர் கிறிஸ்டன் ஜோட்னரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் தீபாவளி பண்டிகையின் போது தி.நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் அஜித் குழு வடிவமைத்த குட்டி விமானம் காவல்துறையினருக்கு உதவும் வகையில் ஈடுபடுத்தப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அஜித் தலைமையிலான தக்ஷா குழு தயாரித்த டிரோன் விமானம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவசர கால உதவிக்காக ஆம்புலன்ஸ் போன்று பயன்படுத்தும் வகையில் அந்த டிரோன் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற விமானக் கண்காட்சி மற்றும் டிரோன் ஒலிம்பிக்கில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டன. இதில் அஜித் தலைமையிலான தக்ஷா குழு 3 பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.