சென்னை, பிப்.24:சென்னையில் ஒரே நாளில் 4 இடங் களில் வீடுகளின் பூட்டை உடைத்து 130 சவரன் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை ராயபுரம் கிரேஸ்கார்டன் பகுதியை சேர்ந்தவர் நதியா (வயது 27). இவர் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுள்ளார். அப்போது நகைகளை அணிந்துகொள்ள பிரோவை திறந்துள்ளார். அதில் வைக்கப் பட்டிருந்த 60 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அருகில் இருந்த மற்றொரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் ரொக்கபணம் அப்படியே இருந்துள்ளது. இது குறித்து அவர் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார்.

இதே போன்று காசிமேடு இந்திராநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரலேகா (வயது 37). இவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார். நேற்று அதே குடியிருப்பில் தரை தளத்தில் வசித்துவரும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பியுள்ளார். அதற்குள் அவரது வீட்டிற்குள்நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்து இருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டாதக கூறப்படுகிறது. இது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இரண்டு புகார்கள் குறித்தும் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி ஜே.பி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. ரயில்வே ஊழியர். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு செனறுள்ளார். நேற்று அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், வீட்டின் உள்ளே சென்று பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் குடும்பத்துடன் கும்பகோணம் சென்றுவிட்டு நேற்று இரவு திரும்பியுள்ளனர். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுற் பிரோவில் வைத்து இருந்த 25 சவரன் தங்கநகைதிருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பள்ளிகரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.