சென்னை, பிப்.25: நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் எனக் கூறி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகரும், மக்கள்நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதில், ‘கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து தேர்தலில் முதல்முறையாக போட்டியிடப் போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர், என் நண்பர் கமல்ஹாசன் பொதுவாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

‘ரஜினிகாந்துக்கு நன்றி, என் 40 ஆண்டு கால நண்பரே, நல்லவர் துணை நின்றால், நாற்பது எளிதே; நாளை நமதே’ என கூறியுள்ளார்.

இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தூத்துக்குடியில் இருந்து இன்று காலை 11.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த கமல்ஹாசன், அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களுடன் ஒத்த கருத்துடையவர்களிடம் கூட்டணி வைத்துக்கொள்வதில் தவறில்லை. இது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன. கூட்டணி உறுதியானதும் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

மேலும், 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து குழு கூடி முடிவு செய்யும். மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்க விரும்புவோர் ரூ.10,000 பணம் செலுத்தி மார்ச் 6-ம் தேதிவரை விருப்ப மனுவிற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.

இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தரும், கமல்ஹாசனும் நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. மேலும், பல கட்சிகள் கமல் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.