சென்னை, பிப்.25: தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தேர்தல் கூட்டணிகுறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தலில் பல்வேறு கொள்கைகளை கொண்ட கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பு தான். அந்த வகையில் நாங்கள் தமிழக திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே மாறுபட்ட கொள்கை கள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணிஅமைத்திருக்கிறோம். தமிழக மக்கள் நலத்திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார்.

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வராவிட்டாலும் கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப் பது பற்றி கேட்டதற்கு,அவர் என்ன கூறினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்றார்.

மக்களவை தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்று கேட்டதற்கு பாமகவுக்கு 7, பிஜேபிக்கு 5 என தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறோம். இன்னும் சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டியது இருக்கிறது. இவை முடிந்த பிறகு தான் அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியவரும் என்றார்.

தமிழகத்தில் நீங்கள் அமைத்திருப்பது பிஜேபி தலைமையிலான கூட்டணியா என்றுகேட்டதற்கு தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தேசிய அளவில் வேண்டுமானால் பிஜேபி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறலாம் என்றார்.

சேலம்-சென்னை இடையிலான 8 வழிச்சாலை விரைவுச்சாலை குறித்து கேட்டதற்கு இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அது குறித்து எதுவும் கூற முடியாது என்றார்.

மேலும் டிடிவி தினகரன் 38 இடங்களில் போட்டியிடப்போவதாக கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு அவர் இந்தியா முழுவதும் 534 தொகுதிகளில் கூட போட்டியிடுவார். அது பற்றி நான் எதுவும் கூற முடியாது என்றார்.