சென்னை, பிப்.25: தண்டையார் பேட்டையில்  சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளியை மிரட்டி கத்திமுனையில் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, தண்டையார்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). இவர், கூலி தொழிலாளியாக வேலை பார்த்துவருகிறார். இதனிடையே, நேற்றிரவு 8 மணிக்கு தண்டையார்பேட்டை மணலி சாலை சுண்ணாம்பு கால்வாய் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளார். அப்போது நாகராஜை வழிமறித்த மர்மநபர்கள் 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 2,000 பணத்தை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து, நாகராஜ் அளித்த புகாரின்பேரில், ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவந்த நிலையில், இன்று காலை வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்தனர். தண்டையார் பேட்டையை சேர்ந்த பஷிர்கான் (வயது 28), பிரேம்குமார் (வயது 22) என்பது விசாரணையில் தெரியவந்தது.

பஷிர்கான் மீது கொலை உள்ளிட்ட 5 வழக்குகள் இருப்பதாகவும், பிரேம்குமார் மீது கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.