சென்னை, பிப்.27: சென்னை கேளம்பாக்கத்தில் மார்ச் 6-ம் தேதி நடைபெற உள்ள பிரமாண்ட பேரணி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார் என பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். மேலும் 1-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேச உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

வரும் மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு விழா மற்றும் பிஜேபி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.முதலில் கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அதனை தொடர்ந்து தமிழக பிஜேபி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த குமரி கூட்டம் நிச்சயம் சரித்திர சாதனை ஏற்படுத்தும்.

அதனை தொடர்ந்து வரும் மார்ச் 6-ம் தேதி பிரதமர் மீண்டும் தமிழகம் வருகிறார். சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இவ்வாறு தமிழிசை கூறினார்.