வூஜென், பிப்.27:பயங்கரவாதத்தை கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள முடியாது என சீனாவில் நடக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை முக்கிய ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத பயிற்சி முகாமை தாக்கி அழித்தது.

இந்நிலையில் சீனாவில் நடைபெறும் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ள நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்து ஊக்கு விக்கும் நாடுகள் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மக்களுக்கு எந்தவித பாதிப்பின்றி தீவிரவாத முகாம்கள் மீதே தாக்குதல் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.