புதுடெல்லி, பிப்.28: பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப் பட்ட சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தனை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எல்லையில் வாலாட்டிய எதிரிகளை விரட்டிச் சென்றபோது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட அபிநந்தனின் வீடியோவை அந்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்டது.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட அவர் நான் இந்திய விமானப் படையின் அதிகாரி என்று எந்தவித மனக்கலக்கமும் இன்றி உறுதியுடன் கூறும் காட்சி அதில் இடம்பெற்று இருந்தது.

அவர் காயமடைந்த நிலையில் வெளியிடப்பட்ட வீடியோவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுபற்றி அறிக்கை வெளி யிட்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இது ஜெனிவா உடன்படிக்கைக்கும், சர்வதேச மனிதநேய சட்டத்துக்கும் எதிரானது என கூறியது.

இதற்கிடையே, அவரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உறவினர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், அபிநந்தனை பத்திரமாகவும், கூடிய விரைவிலும் மீட்கும் நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி சையத் ஹைதர் ஷாவை வரவழைத்து , அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் மூலமாக அந்நாட்டு வெளியுறுத்துறை அலுவலகத்தில், அபிநந்தனை உடனடியாக ஒப்படைக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச அளவில், பாகிஸ்தா னுக்கு இந்த விஷயத்தில் உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கும் வகையிலும், ராஜீய ரீதியிலான நடவடிக்கைகளும் துவங்கி உள்ளன. இதனைத் தொடர்ந்து அபிநந்தனை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் முப்படைகளின் தளபதிகளை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி உள்ளார்.

அபிநந்தனை மீட்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி அவர் விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட உள்ளது. இதில் அபிநந்தனை மீட்பது மற்றும் எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கையாளும் வகையில் மேற்கொண்டு எடுக்க விருக்கும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்படுமென கூறப்படுகிறது.