அவிநாசி, பிப்.28:கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மக்கள், மற்றும் லட்சக்கணக்கான கால்நடைகளின் வாழ்வாதார திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 60-ஆண்டுகாலமாக பல்வேறுகட்ட போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்தப் போராட்டங்களின் முக்கிய பகுதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்லாயிரக் கணக்கான கொங்கு மண்டல மக்கள் தொடர் ஆதரவு கரம் கொடுத்ததையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற அரசாணை வெளியிட்டு ஆரம்பகட்டப் பணிக்காக 3.27 கோடி ரூபாய் ஒதுக்கி சட்டமன்றத்தில் அறிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை வாசித்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். மேலும் நபார்டு வங்கி மூலமாக 132.80 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டத்தின் சுய பயன்பாட்டிற்காக அரசு புறம்போக்கு நிலங்களில் 30 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து அத்திக்கடவு – அவிநாசி பாசனம், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் நீரேற்றுத் திட்ட அடிக்கல் நாட்டு விழா அவிநாசியில் இன்று நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை தலைவரும் அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் தலைமையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இவ் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் பல்வேறுத்துறை அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 9 வட்டங்களில் உள்ள 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 74 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் 971 கசிவு நீர் குட்டைகள் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதுடன் 24,468 ஏக்கர் விவ
சாய நிலம் பாசன வசதி பெறும் என அரசு தெரிவித்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆயிரத்து 652 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 60 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.